தொல்காப்பியம் காட்டும் வேளாண் மரபுகள்

தமிழ்மொழியில் கிடைத்த முதல்நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூலை தொல்காப்பியர் இயற்றியதாக இந்நூலுக்கு அமைந்த பாயிரத்தின் (ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன் என) வழி அறியமுடிகின்றது. இந்நூலின் காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டாகும். இது மூன்று பெரும் பிரிவுகளாக பகுக்கப்பட்டு உள்ளது. அவை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகும்ஒவ்வொரு அதிகாரத்தின் உள்ளும் ஒன்பது இயல்கள் சிறு பகுதிகளாக அமைந்திருக்கின்றது. இது தமிழ்மொழியின் உயிர்நூல் என்றும் அழைக்கப்படுகின்றது.
        மொழிக்கு இரண்டு வழக்குகள் உள்ளன. ஒன்று பேச்சு வழக்கு மற்றொன்று எழுத்து வழக்கு. தொல்காப்பியர் இவ்விரண்டிற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். மொழிக்கு முதன்மையானது எழுத்து. அவ்வெழுத்தின் எண்ணிக்கை, அதன் வகை, அதன் வடிவம், எழுத்துக்கள் பிறக்கும் இடம், உச்சரிக்கும் கால அளவு என்று தமிழ்மொழியின் எழுத்துக் கட்டமைப்பினை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் தொல்காப்பியர். இது எழுத்ததிகாரம் ஆகும்.
        அவ்வெழுத்துக்கள் ஒன்றோ, ஒன்று மேற்பட்டதோ சொல்லாகின்றன. அச்சொல் என்பது என்ன? அதன் வகை, அதனை ஒரு வாக்கியத்தில் எவ்வாறு எழுத வேண்டும், அவ்வாறு சொற்களோடு சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்று மிக விரிவாக எடுத்துரைக்கின்றார். இது சொல்லதிகாரம் ஆகும்இவ்விரண்டு வகை உலகின்  பல மொழிகளிலும் காணமுடியும். ஆனால் அம்மொழியைப் பேசும் மனிதனது வாழ்க்கை எவ்வாறு வாழவேண்டும், அவனது வரலாற்றை எப்படி நெறிமுறைகளோடு இயற்ற வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக பொருளதிகாரம் உள்ளது. இவ்வதிகாரத்தில்தான் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நிலத்தின் ஐந்து வகையான அமைப்பு முறை, அங்கு இருக்கும் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், அவர்களது தொழில்கள், காலச்சூழல் போன்றவைகளை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார். அதன்வழி வேளாண் மரபுகளை அறிதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மனித வாழ்வியல்
       மனித வாழ்வியலை தொல்காப்பியர் மூன்றுப் பிரிவுகளுக்குள் அடக்குகிறார். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளாகும்.
முதல்கரு வுரிப்பொரு வென்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை       (தொல்.பொருள்.949)

முதற்பொருள்
       புவியில் முதல்பொருளாக விளங்குபவை நிலமும் பொழுதுளும் ஆகும்.
முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி
னியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே        (தொல்.பொருள்.950)
என்று கூறும் தொல்காப்பியர், நிலத்தை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
முல்லைக் குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்.பொருள்.951)
என்று விளக்குகிறார். தமிழகத்தில் மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சியாகும். மலையை அடுத்து உள்ள அடர்ந்த காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலமாகும். அதனையடுத்து உள்ள வயலும் வயல் சார்ந்த பகுதிகள்  மருதம் ஆகும். இறுதியாக உள்ள கடலும் கடல்சார்ந்த பகுதிகள் நெய்தல் நிலமாகும். பாலை என்கின்ற நிலம் தமிழகத்தில் இல்லை. எனினும் தலைவன், தலைவி பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் பின்புலமாக இடம்பெற வேண்டி பாலை நிலத்தைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
        அதனைத் தொடர்ந்து பொழுதுகளைப் பட்டியலிடுகிறார் தொல்காப்பியர். ஒரு நாளின் பகுப்புகள் சிறுபொழுதுகள் எனவும், ஒரு வருடத்தின் பகுப்புகள் பெரும்பொழுதுகள் எனவும் விவரிக்கின்றார்.
காரு மாலையு முல்லை           (தொல்.பொருள்.952)

குறிஞ்சி
கூதிர் யாம மென்மனார் புலவர்    (தொல்.பொருள்.953)

வைகுறு விடியன் மருத            (தொல்.பொருள்.955)
எற்பாடு
நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும்      (தொல்.பொருள்.956)


நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே      (தொல்.பொருள்.957)


பின்பனி தானு முரித்தென மொழிப        (தொல்.பொருள்.958)

என்று மிக அழகாக எடுத்துரைக்கின்றார் தொல்காப்பியர்.

கருப்பொருள்
       மேற்கண்ட நிலங்களில் வாழும் உயிருள்ள பொருட்களான தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், அவர்களது தொழில்கள், இசை, கருவி, தெய்வம் முதலானவற்றை எடுத்துக்கூறுவது கருப்பொருளாகும்.
தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப             (தொல்.பொருள்.966)
என்று பட்டியலிடுகிறார் தொல்காப்பியர். இவை ஒவ்வொரு நிலத்திற்கும் வேறுபடுகின்றன. அதனை மிக நுட்பமாக 2500 ஆண்டுகளுக்கு முன்பு உற்றுநோக்கிய தொல்காப்பியரின் அறிவாற்றல்  போற்றுதலுக்குரியது. மனித இனம் விலங்குகளோடு விலங்குகளாக வேட்டையாடிய காலக்கட்டத்திலிருந்து வேளாண்மை செய்து வாழத்தொடங்கிய அக்காலத்திற்கு மாறிய தலைமுறையில் தமிழர்களுக்குச் சிறப்பான இடமுண்டு என்றால் அதுமிகையல்ல. அங்ஙனம் வேளாண்மைத் தொழிலுக்கு முன்னோடியாக விளங்கிய தமிழ் நிலத்தின் அடையாளமாகத் திகழும் தொல்காப்பித்தின் வழி வேளாண் மரபுகளை அறிதல் பல புரிதல்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.
எந்நில மருங்கிற் பூவும் புள்ளு
மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்            (தொல்.பொருள்.)
என்று உரைக்கின்றார் தொல்காப்பியர். அவை என்னென்ன என்பது குறித்து உரையாசிரியர்கள் நமக்கு விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
        முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும். மா, உழையும்,புல்வாயும் முயலும். மரம், கொன்றையும் குருந்தும். புள், கானக்கோழியும் சிவலும். பறை, ஏறுகோட்பறை. செய்தி, நிரைமேய்த்தலும் வரகு முதலியன களைகட்டலுங் கடாவிடுதலும். யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனால், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும். நீர், கான்யாறு. ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும்.
       குறிஞ்சிக்கு உணவு, ஐயவனநெல்லும் தினையும் மூங்கிலரிசியும். மா புலியும்யானையுங் கரடியும் பன்றியும். மரம், அகிலும்ஆரமுந் தேக்குந் திமிசும் வேங்கையும்.புள், கிளியும் மயிலும். பறை, முருகியமுந் தொண்டகப்பறையும். செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினை முதலியன விளைத்தலுங் கிளி கடிதலும். யாழ், குறிஞ்சியாழ். பிறவுமென்றதனால், பூ,காந்தளும், வேங்கையுஞ் சுனைக்குவளையும். நீர் அருவியுஞ் சுனையும். ஊர், சிறுகுடியுங் குறிச்சியும்.
       மருதத்திற்கு உணவு, செந்நெல்லும் வெண்ணெல்லும்.. மா, எருமையும் நீர்நாயும். மரம், வஞ்சியுங் காஞ்சியும் புள்,தாராவும் நீர்க்கோழியும்.. பறை, மணமுழவும் நெல்லரிகிணையும். செய்தி, நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும். யாழ், மருதயாழ். பிறவுமென்றதனால், பூ, தாமரையுங் கழுநீரும்நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்ஊர், ஊர்களென்பனவேயாம்.
       நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும். மா, உமண்பகடு போல்வன. முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று. மரம், புன்னையும் ஞாலலுங் கண்டலும். புள், அன்னமும் அன்றிலும் முதலியன. பறை, மீன்கோட்பறை. செய்தி, மீன்படுத்தலும்உப்புவிளைவித்தலும் அவைவிற்றலும்.  யாழ், நெய்தல்யாழ். பிறவுமென்றதனால், பூ,கைதையும் நெய்தலும். நீர், மணற்கிணறும் உவர்க்குழியும். ஊர், பட்டினமும் பாக்கமும்.
இனிப்பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும். மா, வலியழிந்த யானையும்புலியுஞ் செந்நாயும். மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும். புள், கழுகும் பருந்தும் புறாவும். பறை, சூறைகோட்பறை நிரைகோட்பறை. செய்தி, ஆறலைத்தலுஞ் சூறைகோடலும். யாழ், பாலையாழ். பிறவுமென்றதனால், பூ, மாராவும் பாதிரியும். தோன்றியும். நீர், அறுநீர்க் கூவலுஞ் சுனையும். ஊர், பறந்தலை.
       இன்ன பிறவுமென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க.
என மிக விரிவாக உரையாசிரியர் இளம்பூரணர் எடுத்துரைக்கின்றார். ஆனால் பூவும், பறவையும் நிலம் மாறியும் தோன்றும் எனவும் தொல்காப்பியர் விவரிக்கின்றார்.
மரபியலில் உயிர்ப்பாகுபாடு
       இறுதி இயலானமரபியலின்கண் உயிர்ப்பாகுபாட்டை ஒன்றில் தொடங்கி ஆறு அறிவு வரை வகைப்படுத்தியுள்ளார்.
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே             (தொல்.பொருள்.1518)
என்று புல் முதலான மரம் செடிக்காடிகளுக்கு ஓர் உயிர் என்று பகுத்துக் கூறுகின்றார். இவற்றைப் போகிற போக்கில் யாரும் அக்காலத்தில் எழுதிவிட முடியாது. இதன் வழி அக்காலத்தில் எப்படியான உணவுமுறை  மக்களிடத்தில் இருந்தது, எந்நிலத்தில் எவ்வகையான தாவரங்கள் வளர்ந்தன, எப்படியான வேளாண் முறையைப் பின்பற்றினர். என்று நாம் உணர்ந்துகொண்டு மண் சார்ந்த வேளாண்மை முறையை மக்களிட்தில் கொண்டுசேர்த்து ஆரோக்கியமான வாழ்வை உறுதிபடுத்த முடியும்.
மனிதனது வாழ்வு உணவோடு இரண்டற கலந்துள்ளதாலும், மண்ணின் தன்மை அம்மண்ணில் பிறக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் என்ற அடிப்படையிலும் அம்மண்ணில் காலங்காலமாக எவ்வகையான வேளாண் மரபு பின்பற்றப்பட்டது என்று அறிதல் மிக இன்றியமையாதது ஆகும்.
        நம்முடைய பண்டைய கால வேளாண் மரபுகளை அறிதல் வழி நாம் வருங்காலத்தில் ஒரு புதிய அத்தியாத்ததைத் தொடங்க முடியும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.  
              இன்றைய அறிவியல் வளர்ச்ஞியால் வேளாண்மைத்துறையில் வியக்கத்தக்க சாதனைகள்  பல நிகழ்ந்துள்ளனஎனினும் அறிவியல் கோணத்தால்  மக்களின் அணுகுமுறைகளும் செயல்முறைகளும் மட்டுமே வேறுபடுகின்றதே தவிர சங்க காலத்தமிழர்கள் பின்பற்றிய வேளாண்மை பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் சிறிதும் மாற்றமின்றியே விளங்குகின்றனஇன்றைய இத்தனை வேளாண்மை விந்தைகளுக்கும் வேளாண் அறிவியல் முன்னேற்றங்களுக்கும் நம் முன்னோர்கள் அன்று கண்டறிந்த வேளாண்மைச் செயல் முறைகளும் கண்டறிந்த தொழில் நுட்பங்களுமே விதையாக விளங்கியது எனில் அது மிகையாகாது.     

சே. சுரேஷ்
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத் துறை,
தந்தை ரோவர் கல்லூரி,
பெரம்பலூர் - 62121














Share on Google Plus

About சங்க இலக்கிய ஆய்வு நடுவம்